துறையூர், ஆக.17: பெரிய ஏரி சந்தைப்பகுதியில் பயன்பாட்டில் இல்லாத இறைச்சிகடைகளை அகற்ற வேண்டும் என்று துறையூர் நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார். துறையூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் செல்வராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, ஆணையர் (பொ) நாராயணன், பொறியாளர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கார்த்திகேயன், சுதாகர், இளையராஜா, செந்தில்குமார், வீர மணிகண்டன், ஜானகிராமன், பாஸ்கர், அமைதி பாலு, புவனேஸ்வரி, நித்யா, முத்துமாங்கனி, ஹேமா, கல்பனா, பெரியக்கா, சந்திரா, தீனதயாளன் உள்ளிட்ட நகர்மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆணையர் (பொ) நாராயணன் பேசும்போது, கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை மூன்று நாட்களில் தீர்வு காண்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். கவுன்சிலர் கார்த்திகேயன் பேசும்போது, ஆலமரம், மார்க்கெட் பகுதியில் உள்ள ஆடு, கோழி, மீன் இறைச்சிக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகராட்சி சார்பில் பெரிய ஏரி சந்தைப்பகுதியில் இறைச்சி விற்பதற்காக 15 கடைகள் கட்டப்பட்டு பயன்படாமல் உள்ளது. இதனால் நகராட்சிக்கும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் ஆலமரம், மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை வேண்டும் என்றார்.