சின்னமனூர், செப்.1: தேனி மாவட்டம், சின்னமனூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கலைஞரின் கனவு திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் அரசு அலுவலகங்கள் உட்பட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தேன்.
தொடர்ந்து வரும் காலங்களில் கலைஞரின் கனவு திட்டத்தை மாவட்டம் முழுவதும் பரவலாக கொண்டு செல்வதற்கு, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை எட்டுவோம். பெரியாறு அணையின் பலம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். கேரள அரசு வதந்திகளை பரப்பினாலும் தமிழக அரசு, அதாவது திராவிட மாடல் அரசு, ஒரு போதும் பெரியாறு அணை உரிமையை விட்டுக் கொடுக்காது.