கூடலூர், மே 31: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் நாளை முதல் திறந்து விடப்பட உள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காக பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதமும், மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் என மொத்தம் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர், நாளை (ஜூன் 1) முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப நீர் இருப்பை பொறுத்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டம் உத்தமபாளையம், தேனி மற்றும் போடி தாலுகாக்களில் உள்ள 14707 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவித்துள்ளார்.