கல்வராயன்மலை, ஜூன் 16: கச்சிராயப்பாளையம் அருகே நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்தபோது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் பூபாலன் மகன் மணிகண்டன், கோவிந்தன் மகன் பாலாஜி, செம்மலை மகன் சிவா. நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ஓடையின் பள்ளத்தாக்கில் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது நண்பர்கள் 3 பேரும் மது அருந்தியுள்ளனர். இதில் போதை அதிகளவில் தலைக்கு ஏறியதால் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இரவு 10 மணியளவில் பாலாஜிக்கு மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, மணிகண்டன் தலையில் காயத்துடன் தண்ணீரில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சிவா மற்றும் பாலாஜி ஆகியோர் கரியாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டன் நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.