நீடாமங்கலம், செப். 2: திருவாரூர் அருகே பெரியார் சிலையில் மர்ம நபர்கள் கருப்பு துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் 20 அடி உயரத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு திக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் முக்கிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று பெரியார் சிலையில் போடப்பட்டிருந்த மாலைகளை எடுத்து கீழே போட்டுவிட்டு, அவரது தோழில் கருப்பு துண்டு அணிவித்து துண்டு காற்றில் பறக்காமல் இருக்க முடிச்சு போடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக திக மாவட்ட செயலாளர் கணேசன் நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பெரியார் சிலைக்கு கருப்பு துண்டு அணிவித்தவர் யார்? என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.