குன்னம், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். ரியம்மாபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வழிபாடு, திருவீதி உலா, ஊர்வலம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 8 நாட்களாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் குன்னம், மூங்கில் பாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டு, அம்மன் வழி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.