ஊத்துக்கோட்டை, ஆக. 7: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் 3வது வாரம் ஆடித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 14 வாரங்கள் நடைபெறும். இந்நிலையில் பவானி அம்மன் கோயிலில் நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைதிரவியங்கள் மூலம் மகா அபிஷேகம், அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் நாகவாகனத்தில் உற்சவர் பவானி அம்மன் அனந்த சயனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இக்கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் என நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கார், ஜீப், வேன், டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பெரியபாளையம் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இதனால் நேற்று பெரியபாளையத்தில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் ஊத்துக்கோட்டையிலேயே மடக்கி சத்தியவேடு, திருவள்ளூர் வழியாகவும், சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் மடக்கி சத்தியவேடு வழியாக திருப்பி விடப்பட்டது. ஆடித்திருவிழா நேற்று 3 வது வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. உட்பட 300 போலிசார் பாதுகாப்புணியில் ஈடுபட்டனர்.