பெரியபாளையம், ஜூன் 6: பெரியபாளையத்தில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட 9ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (48). இவரது மகன் பரத் (14). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சுரேந்தர் சிக்கன் பிரைடு ரைஸ் பார்சல் வாங்கி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் வைத்து அந்த பிரைடு ரைஸை பரத் மட்டும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டில் தயாரித்த தோசையையும் பரத் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் திடீரென பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 4 முறை அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் அவரை மீட்டு, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பரத்தின் பெற்றோர் மட்டும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்த தகவலறிந்து பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து பரத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவு ஒவ்வாமை காரணமாக மாணவன் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். எனினும், சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள உணவு மாதிரிகளை சேகரித்து, சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் காரணமாக சம்பந்தப்பட்ட ஓட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.