தேனி, ஜூன் 6: தேனி அருகே சருத்துப்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் மணி(27). இவர் தேனி அருகே லெட்சுமிபுரத்தில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிறுவனத்திற்கு சொந்தமான கட்டுமான தளவாட பொருள்கள் வைக்கும் குடோன் உள்ளது. இக்குடோனில் கட்டுமானத்திற்காக வைத்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 40 இரும்புக் கம்பிகளை நேற்று முன்தினம் மதியம் தேனி&அரண்மனைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லைநகரை சேர்ந்த நாகேந்திரன்(29) திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து, குடோனில் பணியில் இருந்த மனோஜ் மற்றும் அரவிந்த் ஆகியோர் இத்திருட்டில் ஈடுபட்ட நாகேந்திரனை பிடித்து பெரியகுளம் தென்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீசார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, திருடப்பட்ட கம்பிகளை பறிமுதல் செய்தனர்.