பெரியகுளம், மே 24: பெரியகுளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் 21வது வார்டு சுதந்திர வீதியில், கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள தெருக்களில் ஓடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.