பெரம்பலூர், டிச. 24: பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று ஆனி மாத சோமவார பிரதோஷ பூஜை நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவிலில் நேற்று ஆனி மாத சோமவார பிரதோஷ பூஜை நடைபெற்றது. முன்னதாக ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்ளாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதன்படி ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பழங்களுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து ரிஷப வாகனத்தில் உட் பிரகாரம் மூன்று முறை வலம் வந்தார். நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், மோகன் உட்பட தின, வார, வழிபாட்டு சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டனர். பூஜைகளை கௌரிசங்கர் சிவாச்சாரியார் மற்றும் முல்லை சிவாச்சாரியார் செய்துவைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.