பெரம்பலூர்,மார்ச்.11: பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு முகாமில் 381 மனுக்கள் குவிந்தது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 381 மனுக்கள் பெறப்பட்டது.
ஒவ்வொரு மனுவின் மீதும் தனிக்கவனம் செலுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்தவார பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், ஆதி திராவிடர் நல அலுவலர் வாசுதேவன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.