பெரம்பலூர்,செப்.20: பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு, காலாண்டு தேர்வுகள் கடந்த 15ம் தேதி தொடங்கி, வருகிற 27ம் தேதிவரை நடக்கிறது. குறிப்பாக 12ம் வகுப்பிற்கு காலையிலும், 11ம் வகுப்பிற்கு மதியமும் தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது.
இதன்படி முதல் நாளான நேற்று தமிழ் பாடத்திற்கு தேர்வு நடைபெற்றது. நாளை (21ம்தேதி) ஆங்கிலம் பாடத்திற்கு தேர்வு நடைபெறுகிறது. 25ம் தேதி கணிதம், 26ம்தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரையும், 8ம் வகுப்புக்கு காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிவரையும், 10ம் வகுப்புக்கு காலை 9.45 மணிக்கு தொடங்கி 1 மணி வரைக்கும், 7ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரைக்கும், 9ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிவரைக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது.