பெரம்பலூர், ஆக.24: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகளின் கரைகளில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 30ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்டக் கலெக்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி முனியங்குளத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில், பனை விதைகள் நடும் பணிகள் நடை பெற்றது. இந்தப் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்துப் பேசியதாவது : தோட்டக்கலைத்ததுறை மூலம் செயல்படுத்தபட்டு வரும் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், மொத்தம் 30ஆயிரம் பனை விதைகள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டாரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டசெஞ்சேரி முனியங் குளத்தில் சுமார் 1,500 பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பனைமரம் மண் அரிமானத்தைத் தடுத்து, மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்து மழைநீரை சேமிப்பதுடன், மழை பொழிவிற்கு பெரும்பங்கு வகிக்கிறது. பனை மரம் நமது மாநில மரம் என்பது குறிப்பிடத்தக்கது. பனை மரங்களில் கிடைக்கப்பெறும் பதனீர், பனங்கருப்பட்டி, ஓலையில் பல்வேறுப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பனைமரத்தின் ஒட்டு மொத்த பகுதியும் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படும். எனவே பொது மக்கள் அனைவரும் பனை மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பனை மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பழுதடைந்துள்ள ஏரி குளங்கள் புனரமைக்கப் பட்டும், புதிய குளங்கள் அமைக்கும் பணிகளும் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரி மற்றும் குளங்களின் கரைகள் பலப்படுத்தப் பட்டு பனை மர விதைகள் நடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, வேளாண்மை இணை இயக்குநர் கீதா, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வக்குமாரி, தோட்டக்கலை அலுவலர், கனகராஜூ, பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ண ராஜ் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.