பெரம்பலூர்,ஜூன் 7: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தகவல். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது : சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் தமிழ் நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் முதிர் கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நலவாரியத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே, இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். உறுப்பினர் பதிவுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், போட்டோ, கைபேசி எண் கொண்டு வர வேண்டும். இந்த நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வருகிற 10ம்தேதி பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11ம்தேதி அன்று ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 12ம்தேதி வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 13ம்தேதி வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.