பெரம்பலூர்,ஜூன் 5: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறாதவர்களில் தகுதி உடையோரை கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும். பெரம்பலூர் மாவட்ட ஊரக பகுதிகளுக்கான 3ம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உறுதி.
தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எளம்பலூர், செஞ்சேரி, எசனை, லாடபுரம் ஆகிய கிராமங்களில், ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களை மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் நேற்று (4ம்தேதி) தொடங்கி வைத்து, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுடன் முதல்வர் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதற்காக எந்தெந்த ஊராட்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விபரத்தினையும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் எளம்பலூர், செஞ்சேரி, எசனை, லாடபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடை பெறும் மக்களுடன் முதல்வர் முகாமில் நேற்று கலந்து கொண்டு 1,897 பயனாளிகளுக்கு ரூ16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கடைக் கோடி ஏழை எளிய மக்கள், வறுமை நிலையில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் என அனைத்து நிலை மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றிற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல் படுத்தியுள்ளார்.
இதற்காக மாவட்டக் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து முதல் நிலை அலுவலர்களும் முகாம் நடைபெறும் ஊராட்சிகளில் பொதுமக்களை தேடி பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காக வருகை தந்துள்ளனர். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைந்து திரிந்த காலம் மாறி தற்போது அரசு அலுவலர்களே அனைத்து பகுதி கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறாதவர்களில் தகுதி உடையோரை கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் பயன் பெறும் வகையில் வேளாண்மைத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, தாட்கோ, தொழிலாளர் நலத் துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற முடியாமல் இருக்கும் பயனாளிகள் தங்களது கோரிக்கையை மனுவாக வழங்கினால் முறையாக விசாரித்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்டங்கள் கிடைத்திட வழிவகை செய்யப்படும். எனவே பொது மக்கள் அனைவரும் இந்த முகாம்களைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
நேற்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் மொத்தம் 1,897 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம், வெங்காயக் கொட்டகை அமைக்க ஆணைகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ16,40,83,962 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, திட்ட இயக்குநர்கள் தேவநாதன் (ஊரக வளர்ச்சி முகமை) செந்தில் குமரன் (மகளிர் திட்டம்), திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, சப். கலெக்டர் கோகுல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தர ராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) முத்துக்கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ராஜ் குமார்,அட்மா தலைவர் ஜெகதீசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் (பொ) சொர்ணராஜ், தாட்கோ மேலாளர் கவியரசு, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் பாஸ்கரன், மூர்த்தி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் பாண்டியன், வேளாண்மை இணை இயக்குநர் பாபு, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் சத்யா மற்றும் பெரம்பலூர், ஆலத்தூர் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.