பெரம்பலூர், ஜூன் 4: பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 3ம் கட்ட முகாம் 5 இடங்களில் இன்று நடக்கிறது. முகாம்களுக்கு இணையதள வசதியும், மின்சார வசதியும் தடையின்றி வழங்கிட பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் நடத்தப்படும் மூன்றாம் கட்ட முகாம் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்துப் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
மேலும், ஊரகப்பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தொடங்கி வைத்து பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட முகாம்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட டி.களத்தூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்திலும், பெரம்பலூர் ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள ரோவர் மேல்நிலைப் பள்ளியிலும், எசனை அம்பேத்கர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இன்று நடைபெறுகிறது.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அணுகும் துறைகளான வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மனுக்கள் பதிவது, மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். மனுக்கள் அனைத்தும் இணையதள வாயிலாக பதிவு செய்யப்படுவதால், இணையதள வசதியும், மின்சார வசதியும் தடையின்றி வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாம் தொடர்பான தகவல்களை தொடர்புடைய வட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும், விளம்பர பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் அதிகமாக முகாம்களில் பங்கேற்பதை உறுதி செய்திட வேண்டும்.
மேலும் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், பொதுமக்கள் அமருவதற்கான போதிய இருக்கை வசதிகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஏற்படுத்திடவேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திடும் வகையில் சிறு கண்காட்சி அரங்குகளை அரசின் முக்கியமான துறைகள் அமைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். முகாமில் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அதிகமாக வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இதுபோன்ற முகாம்கள் நடத்துவதின் முக்கிய நோக்கமே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அவர்களை தேடிச் சென்று அவர்களுடைய இடத்திலேயே தீர்வு காண்பதற்காக நடத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இத்திட்டத்தினை அனைத்து அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் சொர்ண ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராமன், சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு, ஜெயக்குமார், மோசஸ், தாட்கோ மேலாளர் கவியரசு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தாசில்தார்கள் பெரம்பலூர் பாலசுப்ரமணியன், ஆலத்தூர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாம் தொடர்பான தகவல்களை தொடர்புடைய வட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும், விளம்பர பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் அதிகமாக முகாம்களில் பங்கேற்பதை உறுதி செய்திட வேண்டும்.