பெரம்பலூர், செப். 4: பெரம்பலூர் மதனகோபால சாமி கோயிலில் ஆண்டாளுக்கு ஆணி பூரம் 108 சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகரத்திலுள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சாமி கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஆண்டாள் சுவாமிக்கு ஆணி பூரம் 108 சிறப்பு அபிஷேகம் மற்றும் உட் பிரகார வீதி உலா நேற்று (3ம் தேதி) நடைபெற்றது.
காலை 10.30 மணி அளவில் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பல வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, பகல் (12.30) மணியளவில் மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை சென்னை திருவீரம்ம பட்டாச்சாரியார் மற்றும் பட்டாபி பட்டாச் சாரியார் செய்து வைத்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோயிந்தராஜன், விழா உபயதாரர், ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ஆண்டாள் பக்தர்கள் பேரவை சண்முகம், ஜெய் கணேஷ், கணேஷ், ரவி மற்றும் திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.