பாடாலூர், ஜூன் 26: பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் திருட்டில் ஈடுபட்டது தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தாலுகா குருவாடிபட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன்கள் விஜயகாந்த் (33) தனுஷ் (20) பெரம்பலூர் மாவட்டம் அருமடல் காட்டுக்கொட்டாயை சேர்ந்த வெள்ளையன் மகன் சுரேஷ் (33) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஏற்கனவே திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 16 சவரன் தங்க நகைகள், 67 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர். 3 பேரையும் பாடாலூர் இன்ஸ்பெக்டர் பிரபு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.