பெரம்பலூர்,பிப்.22: தொற்றுநோய் பணிகள் செய்ய நிர்ப்பந்திக்கக் கூடாதென வலியுறுத்தி பெரம்பலூரில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணியின் போது மரணமடைந்த மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ப்ரியா மற்றும் சரண்யா குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிடுக, ஊழியர்களுக்கு முதல் வாரத்தில் சம்பளம் வழங்கிடுக, தொற்று நோய் பணிகள் செய்ய நிர்ப்பந்திக்காதே, பணி வரையரை செய்துடுக, ஆய்வுக்கூட்டத்தில் தரக் குறைவாக பேசுவதை தவிர்த்திடுக என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நேற்று (21ஆம்தேதி) வெள்ளிக்கிழமை சிஐடியு இணைப்புபெற்ற பெரம்பலூர் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கநாதன், மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் தினேஷ் மற்றும் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின்சார்பாக வேணி, கொளஞ்சி லட்சுமி, பிரமிளா, சுகந்தி பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.