பெரம்பலூர், டிச. 24: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 4 பெண் கலெக்டர்கள், 8 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் ஆண் கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வரும் கிரேஷ் லால் ரின்டிகி பச்சாவ், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளர் முருகானந்தம், தமிழக அளவிலுள்ள 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பணிமாறுதல் உத்தரவினை நேற்று பிறப்பித்தார்.
இதன்படி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டராக பணிபுரியும் கிரேஷ் லால் ரின்டிகி பச்சாவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு கூடுதல் செயலாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ், பெரம்பலூர் கலெக்டராக நியமிக்கப் பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 ஜூன் மாதம் 3ம்தேதி வரை நந்தக்குமார் என்பவர் கலெக்டராக பணிபுரிந்துவந்தார். அவர் பணிமாறுதல் செய்யப்பட்ட பிறகு 2017 ஜூன்-4ம்தேதி முதல் 2025 ஜூன் மாதத்தில் நேற்று வரை சாந்தா, வெங்கட பிரியா, கற்பகம், கிரேஸ் பச்சாவ் என அடுத்தடுத்து 4 பெண் கலெக்டர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் ஒருவர் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டராகப் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்க உள்ள அருண்ராஜ் திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2014ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 34வது இடம் பெற்றவர். ஐஐடி கான்பூரில் படித்தவர். கல்லூரியில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகியவர். கலெக்டராக பொறுப்பேற்கும் முன்பாக அருண்ராஜ் புகழ்பெற்ற எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். கடைசியாக செங்கல்பட்டு கலெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.