பெரம்பலூர், ஜூன் 3: 2025-2026ம் கல்வி ஆண்டுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ மாணவியருக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு. பெரம்பலூரில் எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவின்படி, 2025-2026ம் கல்வி ஆண்டுக்கு, நேற்று(2ம் தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள் திறக்கப் பட்டது. இதனையொட்டி 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 ம் வகுப்பு, 11ம்வகுப்புகளில் நடப்பாண்டு புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெரம்பலூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சாக்லேட் மற்றும் பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பளித்தனர்.
வேப்பந்தட்டை தாலுக்கா, வி. களத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் மாணவர்களுக்கு கேசரி இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தார். மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கும் முன்பாக நடத்தப்பட்ட பிரேயர் நிகழ்ச்சியில் நடப் பாண்டு ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறி முறைகள், பள்ளி வளாக தூய்மை, முதல் பருவத்திற் கான வகுப்புகள் முறையாக நடைபெறுதல் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து அரசு, அரசு ஆதிதிராவிடர், அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புகளுக்கு சென்றவுடன் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் தயாரித்து வழங் கப்பட்ட முதல்பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா பள்ளிச் சீருடைகள், விலையில்லா புத்தகப் பைகள் வழங்கப் பட்டன.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 241 ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகள், 24 ஆதிதிராவிட நல தொடக்க நடுநிலைப் பள்ளிகள், 52 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 1 மலை வாழ் சமூகத்தினருக்கான தொடக்கப்பள்ளி, 1 கஸ்தூரிபா காந்தி பலிகா வித்யாலயா பள்ளி, 1 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவாசிய வித்யாலயா பள்ளி என மொத்தம் 320 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 22,363 செட்டு பாடப் புத்தகங்கள், 22,363 மாணவ,மாணவியருக்கும் தலா 2 செட்டு சீருடைகள் மற்றும் 1 புத்தகப் பை வழங்கும் பணிகள் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.