குன்னம், ஆக.13: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அசூரிலிருந்து பெரம்பலூர் – அரியலூர் சாலையில் இணைக்கும் சாலையில் வண்டல் மண் சிதறி கிடந்ததை தொடர்ந்து மழையின் காரணமாக அரசு பேருந்து முதல் இருசக்கர வாகனங்கள் வரை சறுக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களாக வண்டல் மண் எடுக்கப்பட்டு வயல்களுக்கு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தில் இருந்து அரியலூர் – பெரம்பலூர் இணைக்கும் சாலையில் வண்டல் மண் எடுத்தபோது சாலை முழுவதும் வண்டல் மண் சிதறியது.
மேலும் கடந்த இரண்டு தினங்களாக இந்த பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனை தொடர்ந்து சாலையில் உள்ள வண்டல் முழுவதும் ஈரமாகி வழுவழுப்பு தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் இன்று காலை தொழுதூரிலிருந்து குன்னம் செல்லக்கூடிய அரசு பேருந்து இந்த சாலையில் வரும் பொழுது சறுக்கி கொண்டு சாலையின் ஓரமாக உள்ள வாய்க்கால் பகுதி இழுத்துச் சென்றது சாமர்த்தியமாக ஓட்டுனர் பிரேக் பிடித்து நிறுத்தியதால் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
பேருந்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் இருந்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை உடனடியாக ஆட்களை அனுப்பி சாலை முழுவதும் சிதறி கிடந்த வண்டல் மண் களை அகற்றினனர். அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.