பெரம்பலூர், செப். 5: பெரம்பலூரில் கடலூர் மண்டல அளவிலான கைப்பந்து விளையாட்டு போட்டியில் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பாக நடைபெற்றது. 230 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான தமிழக அணிக்கான, கடலூர் மண்டல அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நேற்று (4ம் தேதி) நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், கரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து, 160 மாணவர்களும், 70 மாணவிகளும் என மொத்தம் 230 பேர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, 17 வயதுக்கு உட்பட்டோருக்கு, 19 வயதுக்கு உட்பட்டோருக்கு என 3 பிரிவுகளில், மாணவ மாணவிகளுக்கு தனித் தனியாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் 9 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, மாநில அளவிலான போட்டியில் பங்குபெற ஆணைகள் வழங்கப்பட்டது. இந்தப் போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விசுவநாதன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.