பெரம்பலூர்,நவ.17: 2023-24ஆம் கல்வியாண்டிற்கான பாரதியார் தின, குடியரசு தின பெரம்பலூர் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற தகுதிபெறுவர். 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின, குடியரசு தின பெரம்பலூர் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகளான குத்துச் சண்டை மற்றும் வாள் சண்டை போட்டிகள் பெரம்பலூர் வெங்கடேச புரத்திலுள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (16ஆம் தேதி) நடைபெற்றது.
இப்போட்டிகளை கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மெர்லின் லூர்துராஜ் துவக்கி வைத்தார். வாள் சண்டை போட்டியில் Epee.Sabre, Foil ஆகிய மூன்று பிரிவுகளில் 14,17,19 வயது பிரிவிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர். மேலும் குத்துச்சண்டை போட்டியில் 14,17,19 வயது பிரிவில் 35 வகையான எடைப் பிரிவுகளில் மாணவர்களுக்கும் 37 வகையான எடைப்பிரிவுகளில் மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெறுகிறார்கள். இப்போட்டிகள் மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர், உடற் கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.