திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் இருப்பு உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 83 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.
நீர் வரத்து வினாடிக்கு 110 கன அடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 107 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2,513 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 143 கன அடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 224 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 102 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 1,441 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 577 கன அடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 149 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன் கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 303 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது.