வேலூர், ஜூன் 4: செல்போன் தகராறில் பெயிண்டரை பீர் பாட்டிலால் குத்திய அவரது நண்பனை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர்(32) பெயிண்டர். இவரது நண்பர் நவீன்குமார்(33). தனது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் சேகர் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நவீன்குமார், சேகரிடம் ஒரு போன் பேச வேண்டும், செல்போன் கொடு எனக் கேட்டுள்ளார். நண்பர் என்பதால் சேகர் செல்போன் கொடுத்துள்ளார். செல்போன் பேசிவிட்டு பிறகு வாங்கிக் கொள் எனக்கூறி அதை நவீன்குமார் எடுத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது செல்போனை கொடுக்குமாறு சேகர், நவீன்குமாரிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் சேகர் வீட்டுக்கு சென்ற நவீன் குமார் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சேகரின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்தவர் அரசு பென்ட்லண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் நேற்று சேகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நவீன்குமாரை தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.