திருபுவனை, செப். 5: திருபுவனையில் பெண் மீது நாயை ஏவி விட்டு கத்தியால் குத்திய தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி, திருபுவனை பாரதிதாசன் நகர் மூன்றாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி வேதவள்ளி (45). இவர் மாடு வளர்த்து வருகிறார். அதே தெருவில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் இங்கு வாடகை வீட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
இரு வீட்டாருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் வேதவள்ளி தினமும் தனது மாட்டிற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று சோறு வடித்த நீர் எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேதவள்ளி சோறு வடித்த நீர் எடுத்துச் செல்லும்போது ஜெயலட்சுமி வீட்டில் வளர்த்து வந்த நாய் திடீரென வேதவள்ளியை கடிக்க பாய்ந்து துரத்தி வந்துள்ளது. இதனால் பயந்துபோன வேதவள்ளி, அதனை தடுப்பதற்காக கீழே கிடந்த கல்லை எடுத்து நாய் மீது வீசியுள்ளார். அந்த கல் எதிர்பாராதவிதமாக ஜெயலட்சுமி மீது விழுந்து விட்டது.
இப்பிரச்னையை ஜெயலட்சுமி மனதில் வைத்துக்கொண்டு சம்பவத்தன்று வேதவள்ளி மீண்டும் மாட்டிற்கு சோறு வடித்த நீர் எடுக்க சென்றபோது தனது வீட்டில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டுவிட்டார். நாய் துரத்தியதால் வேதவள்ளி அலறியடித்துக் கொண்டு ஓடும் போது ஜெயலட்சுமி, அவருடைய கணவர் முருகேசன் ஆகிய இருவரும் வேதவள்ளியைப் பிடித்துக்கொண்டு கையில் வைத்திருந்த தடியால் அடித்தும், கத்தியால் குத்தியும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக திருபுவனை துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இது குறித்து வேதவள்ளி அளித்த புகாரின் பேரில் முருகேசன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் மீது திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.