கூடலூர், ஆக.18: கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் எந்தவித குறிப்புகளும் இன்றி மொத்தமாக கைகளில் வழங்கப்படுவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். கூடலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஏழை, எளிய நோயாளிகள் கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்புபவர்களுக்கும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்புபவர்களுக்கும் தேவையான மருந்து மாத்திரைகள் இங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த மருந்து மாத்திரைகளில் எந்த வித குறிப்பும் இன்றி தனித்தனியாக கவர்களில் போடப்படாமல் ஒட்டு மொத்தமாக கைகளில் வழங்கப்படுவதால் எந்த மாத்திரையை எப்போது சாப்பிடுவது என்று தெரியாமல் நோயாளிகளும் முதியோர்களும் குழம்பி வருகின்றனர்.
இது குறித்து நோயாளி ஒருவர் கூறுகையில்,‘‘ஒவ்வொரு மாத்திரையையும் எப்போது எப்படி சாப்பிடுவது எத்தனை மாத்திரைகள் சாப்பிடுவது என்பது குறித்து தனித்தனியாக மாத்திரைகளை கவர்களில் போட்டு அது குறித்த விபரங்கள் எழுதி வழங்கப்படுவது வாடிக்கை. மருந்து மாத்திரைகள் வழங்கும் கவுண்டரில் பணியில் உள்ளவர்கள் வாய்மொழி மூலமாகவே நோயாளிகளுக்கு மருந்துகள் சாப்பிட வேண்டிய முறைகள் குறித்து கூறுகின்றனர். வயதான நோயாளிகள் இதை சரியாக ஞாபகம் வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். மாத்திரைகளை மாற்றி சாப்பிட்டுவிட்டால் அது நோயாளிகளுக்கு தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் குறித்த விவரங்களை தனித்தனியாக கவர்களில் விபரங்கள் எழுதி வழங்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.