மதுரை, ஆக. 28: கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலையான மருத்துவ மாணவிக்கு நீதி வழங்கிட கோரியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனை வழங்கக் கோரியும், மதுரையில் காமராஜர் பல்கலைகழக உறுப்பு கல்லூரியின் நுழைவாயிலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்கேயூ கிளைச் செயலாளர் ரேகன் சுமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை நகர் மாவட்ட தலைவர் டேவிட் ராஜதுரை கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டிலன், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் கல்லூரி கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளை திரையில் தங்களது கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் சிகப்பு வண்ணத்தில் கைரேகைகளை பதிவு செய்தனர். இதேபோல், மதுரை காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள எல்ஐசி மதுரை மண்டல தலைமை அலுவலகத்தில் மதுரை கோட்டத் தலைவர் ந. சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்ஐசி மகளிர் துணை குழு அமைப்பாளர் சித்ரா கண்டன உரையாற்றினார். மதுரை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.