அரியலூர், ஆக. 28: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கல்வி இடைநிற்றல் தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், உயர்கல்வி கற்கும் விதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BBBP) திட்டத்தின்கீழ் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி இடைநிற்றலை தடுப்பதற்காகவும், குழந்தை திருமணத்தை தடுப்பதற்காகவும், உயர்கல்வி கற்கும் வீதத்தை அதிகரிப்பதற்காகவும் மேலும் சமூக நலத்துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட கலெக்டர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த வாகன பிரச்சாராமானது ஒரு மாத காலத்திற்குள் 133 உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பாலின சமநிலை காப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பயன்கள் குறித்த தகவல்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் இடம்பெற்றுள்ளது.
இதில், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் இதர அரசு அலுலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.