திருத்தணி: திருத்தணியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களை முருகன் மலைக்கோயில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான பக்தர்கள் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோக்களில் மலைக்கோயிலுக்கு சென்றனர்.
இந்நிலையில், திருத்தணியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தீன்பாய் (60) என்பவர் மலைக் கோயிலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது மலைக்கோயிலில் பணியில் இருந்த முதல் நிலை போக்குவரத்து பெண் காவலர் லீலாவதி (35) என்பவர் ஆட்டோ டிரைவரை பார்த்து தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. அதற்கு, ஏன் எனது ஆட்டோவை படம் பிடிக்கிறீர்கள் என்று ஆட்டோ டிரைவர் கேட்டதற்கு அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆட்டோ டிரைவரை பெண் காவலர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் திருத்தணியில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு முதல் நிலை காவலர் லீலாவதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎஸ்பி கந்தனிடம் வலியுறுத்தினர். இதையடுத்து ஆட்டோ தொழிலாளர் சார்பில் முதல் நிலை காவலர் மீது புகார் அளக்ிகப்பட்டது. அதேசமயம் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி ஆட்டோ டிரைவர் தீன்பாய் மீது காவலர் லீலாவதியும் பதிலுக்கு புகார் அளித்துள்ளார். இதில் ஆட்டோ டிரைவர் மீது வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.