குறிஞ்சிப்பாடி, செப். 4: குள்ளஞ்சாவடி அருகே வசனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காசிலிங்கம் மனைவி பாக்கியலட்சுமி (38). குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அலுவலக பணியின் காரணமாக கலர் உடையில் கட்டியங்குப்பத்திலிருந்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பாக்கியலட்சுமியை வழிமறித்து ஆபாசமாக பேசி கேலி, கிண்டல் செய்துள்ளனர்.
பின்னர் போலீஸ் என்று தெரிந்தும் தொடர்ந்து கிண்டல் செய்தும் யாரிடமாவது இதுகுறித்து கூறினால் உன்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாக்கியலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் தம்பிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செங்கேணி மகன் சந்துரு (25), தேவராஜ் மகன் திருமாவளவன் (25), நடராஜன் மகன் பிரவீன் (21), மணி மகன் செந்தாமரைச்செல்வன் (20) ஆகிய 4 பேரை குள்ளஞ்சாவடி போலீசார் கைது செய்தனர்.