அண்ணாநகர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங்போர்டு பகுதியில் வசித்து வருபவர் வேலழகி (63). இவர் மீது கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்கு உட்பட 56 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து புளியந்தோப்பு பகுதியில் விற்பனை செய்து வந்தார். பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வதும், பின்னர் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனை செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்ற இவரைஅண்ணாநகர் மது விலக்கு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அண்ணாநகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, வேலழகியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் வேலழகி மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.