பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சமம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கின்றேன். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை; மாறாக, ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள். ஒரு பெண்ணிடம் எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள். ஒரு வீட்டைக் கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள். மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள். புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தைக் கொடுத்துவிடுவாள். கொடுப்பது எதுவாயினும் அதனைப் பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம் என்பது உலக அறிஞர்களுள் ஒருவராகிய வில்லியம் கோல்டிங் என்பவர்தம் கருத்தாகும். இத்தகைய சிறப்புடைய பெண்மையை ஏற்றம் செய்வதன் வழியே சமூகம் உயர்ந்த வெற்றிகளைப் பெறுதல் என்பது இயலும். உலக உயிர் அமைப்புகளுள் பரிணாம வளர்ச்சியின் உயர்ந்த இடத்தில் இருக்கும் உயிரினம் மனிதன் ஆவான். மனிதன் மட்டுமல்ல. உலக உயிர்கள் உதிப்பது தாய்மையினால்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை மட்டுமல்ல. உணர்ந்த உண்மையும் கூட. மனிதனுடைய பிறப்பிலும், அவனின் வளர்ப்பிலும் உண்டாகும் பொறுப்புகள், துயர்கள் எல்லாவற்றையும் ஏற்று வரவேற்று மகிழ்வது தாய்மையின் தனிச்சிறப்பாகும். உலகை உருவாக்கிய இறைவனின் மறுவடிவமாய் அமைந்து மனிதரை இன்றும் படைத்துத் தருபவர்கள் பெண்கள். பெண்கள் அழகின் நிழல், உணர்வுகளின் உள்ளுணர்வு, உறுதி யின் இருப்பிடம், இளகிய மனதின் ஓடை, தாய்மையின் தெய்வ நிலை எனப்பெறும் பல்வேறு சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டமைந்தவர்கள். பெண்ணின் உடல் அழகு மாறிவிடும். ஆனால் பெண்மையில் மறைந்திருக்கும் மாண்புகள் தொடர்ந்து நிற்கும். ஆண் – பெண் படைப்பு இனிது. ஆண், பெண் ஆகியோரின் தனித்தன்மைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களின் அறிவு கூட்டலில், பெண்களைப் புரிந்துக் கொள்ளத் தவறி விடுகின்றனர். மறைந்த இங்கிலாந்து பிரதமர், இரும்பு பெண்மணி மார்கிரேட் தாட்சர், அரசியலில் ஒரு கருத்து சொல்லப்பட வேண்டுமென்றால், ஓர் ஆணிடம் சொல்லுங்கள். ஏதாவது செய்யப்பட வேண்டுமென்றால் ஒரு பெண்ணிடம் சொல்லுங்கள் எனக் குறிப்பிடுகின்றார். மார்கிரேட் தாட்சரின் இத்தகைய கருத்து அரசியலுக்கு மட்டுமல்ல.ஒவ்வொரு தனிமனித வாழ்வியலுக்கும் பொருந்தும். எனவேதான் வள்ளுவர் பெண்மையைப் பற்றிக் குறிக்கும் பொழுது ‘வாழ்க்கைத்துணைநலம்’ எனச் சிறப்பிக்கின்றார். மேலும் ஒருவன் எத்தகைய செல்வ வளங்களைப் பெற்றவனாக இருந்தாலும் தன்னலம் துறந்து குடும்பம், சுற்றம் போன்றவற்றின் நலம் பேணும் அன்புடைய மனைவி அவனுக்கு அமையாது போனால் அவன் பெற்ற செல்வ வளங்களால் எத்தகைய பயனும் அமைந்து விடாது எனவும் எடுத்துரைக்கின்றார். இதனை வலியுறுத்தும் திருக்குறள், இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை(திருக்குறள்: 53) என்பதாகும். ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ எனப்பெறும் வண்ணம் நன்மைகளைத் தன்னகத்தே கொண்டமைந்த பெண்ணானவள் தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலளாய் அமைந்து விடுவாள் எனின் அத்தகைய மனைத்தக்க மாண்புடையவளாகிய பெண்மையைப் பெற்ற ஆணும் அவனைச் சார்ந்த குடும்பமும் சமூகமும் எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இனிதாய் உலகிற்கு வழங்கி நிற்கும். அத்தகைய பெண்மையும் அனைவராலும் தொழத்தக்க பெருந்தெய்வ நிலையை எய்தி மாண்புறும். இதனைச் சீதை வழி, உணர்த்த முனைந்த கம்பன், கல்லாத கலையும் வேதக் கடலும் எனும் காட்சியைச் சொல்லாலே காட்டும் வல்லமை பெற்ற அனுமன் என்னும் சொல்லின் செல்வன் வழிக் கட்டமைத்துக் காட்டுவான். கற்பின் கனலி, கானகத்தின் கல்லும் கசிந்துருகும் வண்ணம் கடும் தவம் இயற்றிய தவமாம் தவமிருந்த தையலாம் காகுத்தன் மனைவி சீதையை அரக்கியர் சூழ்ந்த அசோக வனத்திடைக் கண்டு வந்த அனுமன் இராமனிடம், உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்றமன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்;என் பெரும் தெய்வம்; ஐயா! இன்னமும் கேட்டி? என்பான். (கம்பன்: பா. 6151) – எனக் குறிப்பிடுகின்றான். நடையின் நின்றுயர் நாயகனாகிய இராமன் தெய்வமாய் நிற்க, கற்பின் கனலி சீதை பெருந்தெய்வமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் வியத்தகு காட்சி இது. இந்தியப் பெண்மை இத்தகைய சிறப்பு நலன்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றதாகும். இந்தியப் பெண் கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனவும் ஆனவள். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவள். தன்னை உருக்கி, சிறுமைப் படுத்தி, வலி ஏற்று, முற்றுமாய்த் தான் சார்ந்த குடும்பத்தினை வளப்படுத்தத் தன்னுள் பெரும் தேய்தலை ஏற்றுத் தியாகத்தின் வழி பெருந்தெய்வ நிலையை எய்தி நிற்பவள். இத்தகைய பெண்ணைத் தலையாய்க் கொண்டதுதான் இந்தியப் பண்பாடும், குடும்ப அமைப்பும் சமய முறைமையும் ஆகும். எனவேதான் சிவபெருமான் இடப்பாகத்தில் உமையாளை ஏற்றுப் பெண்ணின் நல்லாளோடும் பேரருள் புரிகின்றார். மாலவனோ இலக்குமியைத் தன் நெஞ்சில் ஏற்று மலர்மகள் உறை மார்பனாய்க் காட்சி தந்துக் கருத்தில் நிறைகின்றார். நான்முகனோ நாமகளைத் தன் நாவில் கொண்டு நல்லறம் காக்கின்றார். பெண்மையை அறிவின் திருவுருவாய்ப் போற்றுகின்றன இந்தியச் சமயங்கள். அக்ஷர விவக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாஸ்திரம், ஜோதிடசாஸ்திரம், தர்மசாஸ்திரம், யோகசாஸ்திரம், மந்திரசாஸ்திரம்,சகுனசாஸ்திரம், சிற்பசாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், உருவசாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சந்தப்பிரமம், வீணை, வேணு (குழல்) மிருதங்கம், தாளம், அக்கிர பரீட்சை, கனக பரீட்சை, ரச பரீட்சை, கசபரீட்சை, அசுவ பரீட்சை, ரத்தின பரீட்சை, பூமி பரீட்சை, சங்க கிராம இலக்கணம், மல்யுத்தம், ஆகருடணம், உச்சாடணம், விந்து வேடணம், மதன சாஸ்திரம், மோகனம், வசீகரணம், ரசவாதம், காந்தருவவாதம், பைபீல வாதம், கவுந்துக வாதம், தாதுவாதம், காருடம், நட்பு, முட்டி, ஆகாயபிரவேசம், ஆகாய கமணம், பரகாய பிரவேசம், அதிரிசயம், இந்திரசாபம், மகேந்திரசாபம், அக்கினி தம்பம், சலத்தம்பம், வாயுத்தம்பம், நிட்டி தம்பம், வாக்குத் தம்பம், சுங்கிலதம்பம், கன்னதம்பம், கட்கத்தம்பம், அவத்தை பிரயோகம், எனப்பெறும் அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவளாய், தன்னை வணங்கும் அடியவர்க்கு அறிவிக்கும் ஆற்றல் பெற்றவளாய்க் கலைமகள் அமைந்துள்ளாள் என்றும் குறிப்பிடுகிறது சரசுவதி அந்தாதி. இதனை, ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய வுணர்விக்கும் என்னம்மை – தூயஉருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளேஇருப்பளிங்கு வாராது இடர். (காப்புச்செய்யுள்)- என்ற பாடல் வெளிப்படுத்தி நிற்கின்றது. பெண் செல்வத்தின் மேன்மையினைத் தன்னகத்தே கொண்டவளாயும் குறிக்கப்படுகிறாள். வைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ‘ஸ்துதி’ என்னும் ஸ்தோத்திரத்தில் மகாலட்சுமியை ‘மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள்’ என்று புகழ்ந்து பாடுகிறார் ஒருவன் திருமாலின் அருளைப் பெற வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும் என்பது.வைணவ மரபு ஆகும். இதனைக் கருத்தில் கொண்டே நம்மாழ்வாரும் ‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா’ என்று கணப்பொழுதுகூட பிரியாது திருமாலுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என எடுத்துரைக்கின்றார். செல்வம், புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் இலக்குமியே ஆவாள். இத்தகைய சிறப்புகளை உடைய மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் வழிபாடு செய்கின்றார். நான்முகன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் வழிபடுகின்றார். மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசி மாத சங்கராந்தியிலும் வணங்குகின்றார் எனப் புராணங்கள் குறித்து நிற்கின்றன. பெண் அறிவும், மங்களமும் செல்வமும் தந்தருள்பவள் மட்டுமல்ல. ஆணுக்குத் தெளிவருள் தந்திடும் சோதியாய், ஆணின் உயரிய எண்ணங்கள் உயர்வெற்றி அடைய உதவும் சக்தியாயும் அமைகின்றாள். எனவேதான் சக்தி வழிபாட்டினை மேற்கொண்ட பாரதியும், எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றிஎங்கும் வெற்றி எதனினும் வெற்றிகண்ணு மாருயி ரும்மென நின்றாள்காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்மண்ணும் காற்றும் புனலும் அனலும்வானும் வந்து வணங்கிநில் லாவோ?விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோவெல்க காளி பதங்களென் பார்க்கே?- எனக் குறிப்பார். இவ்வாறு இந்திய, தமிழ் சமய, பண்பாட்டு மரபு இறைப் பரம்பொருள்களுக்கு மனைவியாய் அமைந்த பெண்மையை மட்டும் போற்றியதல்ல. மானுடப் பெண்களாய்ப் பிறந்தவர்களையும் போற்றிக் கொண்டாடிய சமூகம் ஆகும். பேயுருக் கொண்டு, இறைவன் மேல் அன்பு பாராட்டிய காரைக்கால் அம்மையாரைச் ‘சிவபெருமானின் தாய்’ எனக் கொண்டாடிய சமூகம் தமிழ்ச் சமூகம். காரைக்கால் அம்மையார் பேயுருக் கொண்டு தலையினால் நடந்து வருவதனைப் பார்த்த உமையம்பிகை, தனது திருவுள்ளத்தில் அன்பு கொண்டருளி, விரும்பித், தலையினாலே நடந்து இம்மலைமேல் ஏறிவரும் ஓர் எலும்பு உடம்பு பெற்ற இதன் அன்பு என்னே? என்று சிவபெருமானைப் பார்த்து வினவுகின்றார்.அதற்கு இறைவனோ, ‘உமையே! நீ சொல்லிய வண்ணம் வரும் இவள் நம்மைப் பேணுகின்ற அம்மையே யாவள்; மற்றும், இந்தப் பேய்வடிவாகிய பெருமைசேர் வடிவத்தையும் நம்மிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டனள்” என்று சொல்லியதுடன், காரைக்கால் அம்மையாரை நோக்கி ‘நம் அம்மையே!’ என்கின்ற செம்மைதரும் ஒப்பற்ற ஒருமொழியினை உலகமெல்லாம் உய்யும்பொருட்டே அருளிச் செய்தார். ‘தாயுமிலி தந்தையிலி தான்தனியன்’ எனத் திருவாசகம் மொழிவதுபோல் தாயும் தந்தையும் இல்லாத சிவபெருமானுக்குத் தாயாய் வந்தமைந்த காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை, ‘அன்னையிலா உனக்கிவளோ அன்னையாய் வந்தாளோ’ எனத் திருவிளையாடற்புராணம் வியந்து போற்றும். இவ்வாறு இறைவன்மேல் கொண்ட தாயன்பின் காரணமாக இறைவனைப் பிரியாது உறையும் வரம் வேண்டி நின்ற காரைக்கால் அம்மையாரின் அன்பின் திறத்தினை, இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடிஅறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.(காரைக்கால் அம்மையார் புராணம்: பா:. 60) – என உரைக்கும் பெரியபுராணம். இறைவனுக்குத் தாயாய் மட்டுமல்ல. தான் கொண்ட கணவன் தவறிழைக்கும் பொழுது இந்தியப் பெண்மையின் அடையாளமாக, நின்று கணவனையும் சமய மரபினையும் பண்பாட்டினையும் காத்து நின்ற பெண்களாய் இந்தியப் பெண்கள் சிறந்திருக்கின்றனர். அத்தகைய மாண்பமைந்த பெண்களுள் ஒருவராகவே மங்கையர்க்கரசியார் விளங்குகின்றார். மங்கையர்க்கரசியாரின் கணவனான பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் சைவ சமய நெறியினின்று விலகிச் சமணர்கள் பக்கம் சார்கின்றான். ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பதற்கேற்ப, மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர்.இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோயில்களெல்லாம் பாழாகிச் சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; அதனால், பாண்டிய நாடு தனது பழம்பெருமையையும் சமய மரபினையும் இழந்து தடுமாறியது. அத்தகைய நிலையில் பாண்டியனின் வாழ்க்கைத் துணைநலமாய் அமைந்திருந்த பேரரசி மங்கையர்க்கரசியார் சைவ சமயத்தினைப் பாண்டிய நாட்டில் மீண்டும் தழைக்கச் செய்யப் பேரார்வம் கொண்டார். சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தரால்தான் பாண்டிய நாட்டையும் மன்னனையும் மக்களையும் சமணர்களிடமிருந்து மீட்க முடியும் என்பதையும் உணர்ந்தார். உடன் திருஞானசம்பந்தரைப் பாண்டிய நாட்டிற்கு வரவழைத்தார். திருஞானசம்பந்தரின் வருகையைக் கேள்வியுற்ற சமணர்கள் அவர் தங்கியிருந்த திருமடத்திற்குத் தீ வைத்தனர். இந்தத் தவறுக்குக் காரணம் மன்னரின் நிர்வாகமே என உணர்ந்த திருஞானசம்பந்தர் சமணர்கள் இட்ட தீத்தழல் ‘பையவே சென்று பாண்டியர்க்காகவே’ எனப் பாடினார்.திருஞானசம்பந்தர். மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாத்தும், அமைச்சர் குலச்சிறையாரின் அன்பினாலும் அரசன்பால் குற்றம் இருந்ததாலும், அவன் மீண்டும் சைவநெறியில் சேரவேண்டும் என்பதாலும் சம்பந்தரின் திருக் கைகளால் திருநீறு பூசும் பேறு பெறப் போவதாலும் ‘பையவே செல்க’ என்றார். திருஞானசம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. மன்னனின் வெப்புநோயினைத் தீர்க்கும் வழியறியாது சமணர்கள் திகைத்தனர். அந்நிலையில் திருஞானசம்பந்தர், ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறுதந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறுசெந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயன் திருநீறே’( 2: 66: 1) – எனத் தொடங்கும் பதிகத்தைப்பாடி பாண்டிய மன்னனின் வெப்புநோயினை நீக்கினார். மேலும் சமணர்களுடன் அனல்வாதம், புனல்வாதம் செய்து வென்றார். எனவே மன்னனும் மக்களும் சைவசமயத்திற்கு மாறினர். இவை யாவற்றிற்கும் காரணமாய் அமைந்தவர் மங்கையர்க்குத் தனியரசியாய் அமைந்த மங்கையர்க்கரசியே ஆவார். எனவேதான் திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானிபங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்தோறும் பரவப்பொங்கழலுருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளிஅங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே ( 3: 120: 1)- எனத் தொடங்கும் பதிகம் பாடி மங்கையர்க் கரசியாரைப் போற்றிப் புகழ்கின்றார்.இவ்வாறு முப்பெரும் கடவுளர்க்கு மனைவியராய் அமைந்த பெண்களின் பெருமையை மட்டுமல்ல. இவ்வுலகில் மானுடப் பெண்ணாய்ப் பிறந்து இறைவனுக்கே அன்னையாகும் பேறு பெற்ற பெண்ணின் சிறப்பினையும் தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலளாய் அமைந்த பெண்ணின் பெருமைகளையும் நமது இலக்கியங்களும் புராணங்களும் பெரிதும் போற்றிக் கொண்டாடுகின்றன. எனவே உலக மகளிர் தினத்தினைக் கொண்டாடுகின்ற நாம், இந்நன்னாளில் இந்தியப் பண்பாட்டிற்கும் குடும்ப அமைப்பிற்கும் சமய மரபிற்கும் ஏற்ற பெண்மையின் மாண்புகளைப் போற்றி அதன்வழி நடந்து பெருமையுறுவோமாக!-முனைவர் மா. சிதம்பரம்…