வேலூர், மே 22: வேலூரில் நடந்த பயிற்சி வகுப்பில் மதுபோதையில் பெண் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் திருத்தப்பட்ட 3 முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான பயிற்சி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் உட்கோட்ட அளவில் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் விஐடியில் முதற்கட்ட பயிற்சி ஏடிஎஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த பயிற்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
அப்போது காட்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் கோபி என்பவரிடம் புதிய சட்டங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் பாரதி கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த கோபி ஆபாசமாக பேசி அநாகரீகமாக நடந்து கொண்டாராம். இதனால் பயிற்சி முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சக காவலர்கள், கோபியை அங்கிருந்து வெளியேற்றினர். ேமலும் அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் காவலர் கோபி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி மணிவண்ணன், பயிற்சி முகாமில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட காவலர் கோபியை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.