மங்கலம்பேட்டை, ஆக. 28: கம்மாபுரம் அருகே பெண்னை அடித்து கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் முஷ்ணம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும், வேம்பு(34) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, ஜெயப்பிரியா(14) என்ற மகளும், அன்பு மற்றும் அன்புமணி (இரட்டையர்களான இருவருக்கும் வயது 6) என்ற 2 மகன்களும் உள்ளனர். வேம்புவின் கணவர் ஜெய்சங்கர் வலது கால் சிறிது ஊனமுற்றவர். இதனிடையே வேம்புக்கும், விருத்தாசலம் அருகே கம்மாபுரம் மேட்டுத்தெருவில் வசித்து வரும் சின்னசாமி என்பவரின் மகன் சிவா(30) என்பவருக்கும், கரும்பு வெட்டுவதற்கு ஒன்றாக செல்லும்போது, பழக்கம் ஏற்பட்டு 2 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேம்பு கம்மாபுரத்தில் உள்ள சிவாவின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் நடந்த தகராறில், சிவா, வேம்புவின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். சிவாவின் வீட்டிற்குள் வேம்பு சடலமாக கிடப்பதாக, கம்மாபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, காவல்துறையினர் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, கொலை செய்த சிவாவை தேடி வந்த நிலையில், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்மாங்குடி கிராமத்தில், சிவா மறைந்து இருப்பதை அறிந்து, அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து, அவரை கம்மாபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.