மூணாறு, ஜூன் 24: மூணாறு அருகே உள்ள டோபி பாலம் பகுதியில் கடந்த 16ம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஜெயா பவனில் சகுந்தலா (65) என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். தொடர்ந்து சகுந்தலாவின் கழுத்தில் இருந்த, 2.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு கத்தியால் அவரையும் அவரது பேரனையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து சகுந்தலா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வெள்ளத்தூவல் போலீசார் தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது வட்டவடை கோவிலூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜ்குமார் திருப்பூரில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருப்பூர் வந்த கேரள போலீசார் அங்கு வைத்து ராஜ்குமாரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.