தேனி, நவ. 18: பெரியகுளம் அருகே கீழக்காமக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி பொன்னுத்தாய்(56). இதே கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குமரேசன் மகன் குமரன்(31). கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி பொன்னுத்தாய் இக்கிராமத்தில் உள்ள சிவனாண்டி என்பவரது தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கே வந்த குமரன், விறகு கட்டையால் பொன்னுத்தாயை சரமாரியாக கொலைவெறித்தாக்குதல் நடத்தியதோடு, தனக்க பெண் தர விரும்புகிறவர்களிடம் சென்று, தன்னை பற்றி தவறாக கூறி பெண் தரவிடாமலா செய்கிறாய்.
உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் எனக் கூறி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுத்தாய் அளித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் குமரேசன் என்ற குமரன் மீது கொலைமுயற்சிக்கான இபிகோ 307 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனியில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் வக்கீல்.குருவராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி குமரேசன் என்ற குமரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாத காலம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.