திருப்பூர், ஜூன் 10: திருப்பூர், ஆண்டிபாளையம் அடுத்த சின்னியகவுண்டனபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தனது தாய் தனபாக்கியத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனபாக்கியம் வீட்டுக்கு வெளியே துணிகளை துவைத்து கொண்டு இருந்தார். அப்போது, தங்கவேலின் மனைவி மீனாட்சிக்கும், தனபாக்கியத்திற்கும் இடையே சின்டெக்சில் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த தங்கவேல் மற்றும் மீனாட்சி ஆகியோர் சேர்ந்து தனபாக்கியத்தை தாக்கி கீழே தள்ளினர். இதில், தனபாக்கியம் மயக்கமடைந்தார். இதனைபார்த்த ஆகாஷ் தங்கவேலை தாக்கினார். இதில், ஆத்திரமடைந்த தங்கவேல் ஆகாஷை கத்தியால் தாக்கினார்.
இதில் காயமடைந்த ஆகாஷ் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மீனாட்சி (37), தங்கவேல் (40), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் மீனாட்சி கொடுத்த புகாரின் பெயரில் ஆகாஷ் மற்றும் அவருடைய தாய் தனபாக்கியம் ஆகியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.