சேத்தியாத்தோப்பு, செப். 2: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தம்பியாபிள்ளை மகன் லெனின் என்பவர் 27 வயது பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமானார். இதை தொடர்ந்து லெனினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர், நீ கர்ப்பத்தை கலைத்துவிடு. எனது சகோதரியின் திருமணம் முடிந்தபிறகு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாராம். ஆனால் அந்த பெண் இதற்கு மறுப்பு தெரிவித்து, விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறி உள்ளார். இதற்கு லெனின் சம்மதம் தெரிவிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதில் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிய லெனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ஆய்வாளர் மீனா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான லெனினை தேடி வருகின்றனர்.