திட்டக்குடி, ஆக. 15: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் மனைவி சின்னபொண்ணு(50). இவர்களுக்கு மணிகண்டன், மணிமாறன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இளையபெருமாள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து சின்னபொண்ணு திட்டக்குடியை அடுத்துள்ள வதிஷ்டபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 5 மாதமாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது மூத்த மகன் மணிகண்டன், நேற்று காலை தனது தாயை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டி இருந்தது. இதனால் மணிகண்டன் அவரது தாயாரை அழைத்துள்ளார். அவர் வராததால் அவரிடம் இருந்த மாற்றுச்சாவியை வைத்து கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சின்னபொண்ணு ரத்த வெள்ளத்தில் கீழே இறந்து கிடந்துள்ளார். அருகில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், இது குறித்து திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர்கள் அருள் வடிவழகன், ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தூக்கிட்டு இறந்து கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியை சேர்ந்த அங்கமுத்து மகன் சதாசிவம் (70) என்பதும், இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்ததும், கடந்த 2 மாதத்திற்கு முன் வயது மூப்பு காரணமாக வாட்ச்மேன் வேலையில் இருந்து விலகியதாகவும் தெரியவந்தது. சின்னபொண்ணு மார்பு மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரிந்தது.
மேலும் மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். கள்ளக்காதல் தகராறில் முதியவர் பெண்ணை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை கொலை செய்துவிட்டு, முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.