சென்னை, ஜூன் 26: சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினி நில பிரச்னை தொடர்பாக தந்தை மற்றும் சகோதரனுக்கு எதிராக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால், புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல், புகார் முடித்து வைக்கப்பட்டது. மேலும், தன்னை கண்ணியம் குறைவாக நடத்தியதாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் சாந்த மூர்த்திக்கு எதிராக பிரியதர்ஷினி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், காவல் நிலையங்களுக்கு வரும் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பல உத்தரவுக பிறப்பித்த போதும் அதை இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பின்பற்றவில்லை என்று சுட்டிக் காட்டினார். புகார் குறித்த நிலையை அறிய வந்த பெண்ணை கண்ணியம் குறைவாக நடத்தியது மனித உரிமையை மீறிய செயல் எனக் கூறி, பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை ஆய்வாளர் சாந்தமூர்த்தியிடமிருந்து வசூலிக்க வேண்டும். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டு என உத்தரவிட்டது.