சிதம்பரம், ஜூன் 20: சிதம்பரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் தச்சன் தெரு பகுதியை சேர்ந்த அன்பு மகன் கபாலி (எ) ராஜராஜன் (43), நேற்று அதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பால் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது பைக்கில் சென்ற கபாலி அந்த பெண் மீது மோதுவது போல் சென்று நிறுத்திவிட்டு, அவரிடம் பணம் கேட்டு அசிங்கமாக திட்டி கீழே தள்ளியுள்ளார்.
பின்னர் வீச்சரிவாளின் பின்பக்கத்தால் காலில் அடித்து அந்த பெண்ணிடம் இருந்த ரூ.1000 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வீச்சரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பைக்கில் தப்பி சென்றுவிட்டாராம். இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பித்து ஓடிய கபாலி (எ) ராஜராஜனை தேடிவந்தனர். இந்நிலையில் குமாரமங்கலம் பகுதியில் கபாலி இருப்பது தெரிந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த வீச்சரிவாள், இரும்பு பைப் ஒன்று, 1000 ரூபாய் பணம், செல்போன் மற்றும் அவரது பைக் ஆகியவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கபாலி ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல இடங்களில் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.