அரூர்: தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற நீதிபதி வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதா என வனத்துறை, காவல்துறை, வருவாய் துறையினர், கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வீடு, வீடாக சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது பெண்கள், ஆண்கள் பலர் தாக்குதலுக்கும், சித்ரவதைக்கும் ஆளானதாகவும், 18 பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு, சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கடந்த 2011ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் உள்ள 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில், 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வேல்முருகன், நேற்று காலை அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்திற்கு வந்தார். அங்கு சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டார். அப்போது, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட நீதிபதிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். …