நன்றி குங்குமம் டாக்டர் தேவை அதிக கவனம்பாட்டி, கொள்ளுப்பாட்டி காலங்களில் இருந்து குடும்பம் சார்ந்த வேலைகள் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தது. நிலத்தோடு அமைந்த அடுப்பில் அமர்ந்து சமைத்தனர். ஆட்டுக்கல், அம்மிக்கல் பயன்பாடும் அவர்களின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் தேவையற்ற கொழுப்பு சேருவதைத் தடுத்தது.ஆனால், இன்று பெண்களுக்கு அனைத்து வேலைகளிலும் மெஷின்கள் அனைத்து விதமான உதவிகளையும் செய்கின்றன. வீட்டில் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கின்றனர். அலுவலகத்தில் கணினியில் அமர்ந்தபடியே உழைக்கின்றனர். இதனால் பெண்கள் எளிதில் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இது பற்றி ரேடியாலஜி மருத்துவர் மோனிஷ் விளக்குகிறார்…வெரிக்கோஸ் வெயின் என்பது என்ன?‘‘வெரிகோஸ் வெயின் பிரச்னை ஒருவரைத் தாக்கியுள்ளது என்பதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. கால்களில் வீக்கம் மற்றும் அரிப்பும் இருக்கும். நரம்புகள் தடிக்கத் துவங்கும். கெண்டைக்கால்ப் பகுதியில் வலி, கனமான உணர்வு மற்றும் வீக்கம் இருக்கலாம்.கால்களை நீட்டி வைத்து ஓய்வெடுக்கும்போது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இரவு தூங்கி எழுந்த பின்னர் கால் வீக்கம் குறைந்திருப்பதை உணரலாம். கால்கள் மற்றும் கணுக்கால்களைச் சுற்றி சருமம் கருப்பாகும். இதுபோன்ற அறிகுறிகள் உள்ள பெண்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம் ஆகும்.சுருள் சிரை நாளங்களை நாம் வெரிக்கோஸ் வெயின் (Varicose veins) என்கிறோம். தொடையின் உட்புறப் பகுதி, முழங்கால் மற்றும் காலின் பின் தசை, கெண்டைக்கால் பகுதியைச் சுற்றி பிரதானமாக காணப்படும் வீங்கி சுருண்டு, வலியுடன் பெரிதாகியிருக்கும் நாளங்களையே நாம் இவ்வாறு அழைக்கிறோம்.நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் உள்ள நரம்புகள் சுருண்டு, ரத்த ஓட்டம் தடைபடுவதால் உண்டாகிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை கால்களில் வலி ஏற்படும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கும்போது நரம்பு மற்றும் இதய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.’’யாரை எல்லாம் இந்த நோய் தாக்குகிறது?‘‘அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்கள், அதிகளவு எடையுள்ள பொருட்களை உயரமாகத் தூக்குபவர்கள், பிரசவத்துக்குப் பின்பான பெண்கள், அதிக உடல் எடை கொண்டவர்களையும் இந்நோய் தாக்கலாம். பரம்பரை மற்றும் மரபணு காரணங்களாலும் இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது.இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள் இரு கால்களின் மீதும் செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட், டாப்ளர் ஸ்கேன் செய்து ஆரம்ப நிலைகளிலேயே வெரிக்கோஸ் வெயின் பிரச்னையைக் கண்டறிய முடியும். ஸ்டாக்கிங்ஸ் எனப்படும் காலுறைகளை காலை முதல் இரவு வரை அணிந்திருப்பது தற்காலிகத் தீர்வு மட்டுமே. வெரிக்கோஸ் வெயின் பிரச்னையை சரி செய்து கொள்ள முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.’’நவீன சிகிச்சை முறைகள்?‘‘அறுவை சிகிச்சைக்கான கத்தியைப் பயன்படுத்தாமல் தையல் இல்லாத, தழும்பு ஏற்படாத வகையில், மிகவும் நுண்ணிய கீறலுடன் கூடிய சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை இல்லாத புதிய ஊடுறுவல் சிகிச்சைகள் என்பவை எந்த ஒரு நிலையிலும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கான புதிய சிகிச்சை முறைகளாகும்.இந்த சிகிச்சை உத்திகளில் லேசர், கதிர்வீச்சு, அதிர்வெண் நீக்கம் மற்றும் பிற மருந்துகளைக் கொண்டும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சை முறையின் போது 3 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு ஊசி குத்தும் உடற்பகுதியில் லேசான வலியும், தோல் பகுதி சிவந்தும் காணப்படும். சாதாரண வலிநிவாரணிகளைக் கொண்டு இதனைச் சரி செய்திடலாம்.ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் பொழுது கணுக்கால்களில் கருப்பு நிறத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த புண்களாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. பற்களில் செய்யப்படும் வேர் சிகிச்சையைப் போல பகல் நேரத்திலேயே இந்த சிகிச்சை முறையை எளிதில் செய்து கொள்ளலாம்.உணர்விழப்புக்கான மருந்துகள் எதுவும் இதில் கொடுக்கப்படுவதில்லை. ஒரு மணி நேரத்துக்குள் முழு சிகிச்சையும் முடிந்துவிடும். சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்துக்குள்ளாகவே அவர் அன்றாட வேலைகளைச் செய்ய முடியும். கீறல், வெட்டுக்காயம் இல்லாத காரணத்தால் இந்த சிகிச்சைக்குப் பின்னர் நோய்த்தொற்றோ, ரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பே இல்லை.’’– யாழ் ஸ்ரீதேவி
பெண்களை தாக்கும் வெரிக்கோஸ்
previous post