சேலம், அக்.15: சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என, இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்பி அருண்கபிலன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுக்கான குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று, மாவட்ட எஸ்பி அருண்கபிலன் தலைமையில் நடந்தது. கூடுதல் எஸ்பிக்கள் கண்ணன், செல்வம், டிஎஸ்பிக்கள் சங்கீதா, நாகராஜன், ராஜா, மரியமுத்து, ஹரிசங்கரி, அமலஅட்வின், தமிழ்வாணன், சின்னசாமி, அனைத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எஸ்பி அருண்கபிலன் பேசுகையில்,‘‘சேலம் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு பணியில் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். இதற்காக ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணித்து, ஆர்டிஓ.,க்கள் முன் ஆஜர்படுத்தி, உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், விரைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். இப்பணியை அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் இருக்கும் காணாமல் போனவர்கள் வழக்குகளை மீண்டும் கையில் எடுத்து, விசாரித்து கண்டறிய வேண்டும். உட்கோட்ட பகுதிகளில் டிஎஸ்பி மேற்பார்வையில் இரவு ரோந்து பணியை அதிகரித்து, குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
காவல்நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மக்களிடம் மிக கனிவாக பேசி, அவர்களின் பிரச்னையை கேட்டறிந்து உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, கடந்த மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு, எஸ்பி அருண்கபிலன் பாராட்டு சான்றுகளைவழங்கினார். இதில், ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் எஸ்ஐக்கள் அந்தோணி மைக்கேல், சதீஷ்குமார், துர்காதேவி, தேவிமரியசெல்வம் உள்ளிட்ட 25 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.