கிருஷ்ணகிரி, மே 8: கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், பெட்ரோலுடன் தண்ணீர் கலந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி திருமலை நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று தனது டூவீலருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து சிறிது தூரத்தில் சென்றதும் வாகனம் நின்றுள்ளது. இதையடுத்து, வாகனம் ஸ்டார்ட் ஆகாததால், அருகிலுள்ள ஒர்க்ஷாப்பிற்கு சென்று சரிபார்த்துள்ளார்.
அப்போது, பெட்ரோலுடன் தண்ணீர் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று காலை அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்ற அண்ணாமலை, அங்கிருந்த வாடிக்கையாளர்களிடம் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பதாக தெரிவித்துள்ளர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், டவுன் போலீசார் அங்கு வந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பார்த்தனர். அப்போது, பெட்ரோல் நிறம் வித்தியாசமாக இருப்பதை அறிந்த போலீசார் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து அந்த பெட்ரோலை பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டனர். மற்ற பங்க்கில் உள்ள பெட்ரோலுக்கும், அங்குள்ள பெட்ரோலுக்கும் நிறத்திலும், திட தன்மையிலும் வித்தியாசம் இருந்தது. இதனால், போலீசார் அங்கு சேகரிக்கப்பட்ட பெட்ரோலை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், அந்த பெட்ரோல் பங்க்கில் தற்காலிகமாக பெட்ரோல் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.