கன்னியாகுமரி ஆக. 26: கன்னியாகும சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்கை மூடக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரை பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்கக்கூடாது என்று மீனவர்கள் கடந்த 9ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போராட்டங்களுக்கிடையே புதிய பெட்ரோல் பங்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்த பெட்ரோல் பங்கை மூட வலியுறுத்தி சின்னமுட்டம் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டதின் 17வது நாளான நேற்று மீனவர்கள் கருப்புக்கொடி கையில் ஏந்தி சின்னமுட்டம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி சின்னமுட்டம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.