சேலம், ஆக. 1:சேலத்தில் வீட்டை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (40). இவர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கையில் 3 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, பெட்ரோலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, ‘கடந்த 2008ம் ஆண்டு, சேலம் தாதகாப்பட்டியில் 2,300 சதுர அடி கொண்ட வீட்டை நான் வாங்கினேன். தற்போது வீட்டை விற்றவரின் மகனும், அவரது நண்பரும் சேர்ந்து கொண்டு, வீட்டை திருப்பிக் கொடுக்குமாறு வற்புறுத்தினர்.
நான் தர முடியாது என கூறியதற்கு அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை எரித்து கொலை செய்து, சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளோம். இதனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனர். எனவே, என்னை மிரட்டி வீட்டை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தற்கொலை செய்து கொள்வதற்காக பெட்ரோல் கேனுடன் வந்தேன்,’ என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.